உள்ளடக்கத்துக்குச் செல்

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Other Backward Class (OBC)) என்போர் சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கியுள்ளதாக இந்திய அரசு இனங்கண்டுள்ள பல்வேறு சாதியினரைக் குறிக்கும். பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் என்பது போன்று இந்திய மக்கள் தொகையைப் பல்வேறு வகைகளாகப் பகுக்கும் முறைகளில் இதுவும் ஒன்று. இந்திய நாட்டில் வர்க்க வேறுபாடுகளைப் பொருளாதாரக் காரணங்கள் மட்டும் தீர்மானிப்பதில்லை. இந்திய உற்பத்தி உறவுகளில் வர்க்க வேறுபாட்டைத் தீர்மானிப்பதில் பொருளாதாரத்தைப் போலவே சாதியும் மிக முக்கியமான காரணியாக இருந்து வருகிறது[1]. இந்தியாவில் சாதி பாகுபாட்டினால் பொதுவெளிகள் அனைத்தும் பல சாதி பிரிவினருக்கு தடை செய்யப்பட்டன. கல்வி, வேலை, விளையாட்டு, கலை மற்றும் இதர பொது உரிமைகளான கோவில், ஊர், நிர்வாகம் உள்ளிட்ட எல்லாவற்றிலிருந்தும் புறக்கணிக்கப்பட்டார்கள். கல்வி பெறுவதில் ஏற்படுத்தப்பட்ட தடை தலைமுறை தலைமுறையாகப் பஞ்சம, சூத்திர மக்களைப் பாதித்தது. விவசாயம் சார்ந்த கூலியுழைப்பும், மேல்தட்டினர்க்குத் தொண்டூழியமும் பஞ்சமர்களின் பணி என்றானது.

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு

[தொகு]

தேச விடுதலையின்போது நமக்கான அரசியல் சாசனத்தின்படி இந்தியா முழுவதும் எஸ்சி/எஸ்டி மக்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கை சட்டபூர்வமாகச் செயல்பாட்டிற்கு வந்தது. இதே காலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அம்பேத்கர் பெரிதும் முயற்சி எடுத்தார். “பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியல் அரசிடம் இல்லை. எனவே, பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் அமைத்துப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் தயாரித்த பிறகு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவு செய்யலாம் என்று அம்பேத்கருக்கு அப்போது பதிலளிக்கப்பட்டது. ஆனால், அரசியல் சாசனச்சட்டம் செயல்பாட்டுக்கு வந்து ஓராண்டிற்குப் பிறகும் கமிசன் அமைக்கப்படவில்லை. எனவே தான் இந்துப்பெண்கள் சட்டத் தொகுப்பை சட்டமாக்கிட மறுத்தது, பிற்படுத்தப்பட்டோருக்கான கமிஷன் அமைக்கப்படாதது ஆகிய இரண்டையும் கண்டித்து, தனது எதிர்ப்பை வலிமையாகப் பதிவு செய்திட 1951 செப்டம்பர் 27 அன்று அம்பேத்கர் தனது மத்திய அமைச்சர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார். 1978 பிரதம மந்திரியாகத் திரு.மொரார்ஜி தேசாய் இருந்தபொழுது பி.பி.மண்டல் தலைமையில் மீண்டும் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஆய்வு நடத்தி தன்னுடைய பரிந்துரையை 1980இல் அளித்தது. அதற்குள் அரசு கவிழ்க்கப்பட்டதால் மண்டல் பரிந்துரைகள் செயல்பாட்டிற்கு வரவில்லை. அதன் பிறகு திரு.வி.பி.சிங் அவர்களின் தலைமையிலான தேசிய முன்னணி அரசு 1990 ஆகஸ்ட் 7 அன்று இதர பிற்படுத்தப்பட்டோர்க்கு வேலைவாய்ப்பில் 27 சதவிகிதம் ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றியது.

1980 இல் மண்டல் ஆணைக்குழு அளித்த அறிக்கையின் படி, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 52% இருந்தனர். இந்திய அரசு, மண்டல் ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி, கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப் பணியிடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது.[2]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு – கரும்பலகை". karumpalagai.in. பார்க்கப்பட்ட நாள் 2020-07-16.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-09-25. பார்க்கப்பட்ட நாள் 2015-08-14.

வெளி இணைப்புகள்

[தொகு]